
கோலாலமபூர், பிப் 5 – சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், பிப்ரவரி 21ஆம்தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலும் கனரக மற்றும் சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சாலை விபத்துக்களை குறைப்பதோடு, விழாக் காலத்தில் போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ( Aedy Fadly ) தெரிவித்தார்.
விபத்துக்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், பண்டிகைக் காலத்தில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முதல் வகையைக் கொண்ட சரக்கு லோரிகள் , 7,500 கிலோவுக்கும் அதிகமான சுமை கொண்ட லாரிகள், டிரெய்லர்கள், வெட்டு மரம் ஏற்றிச் செல்லும் லோரிகள், கனரக சக்கர இயந்திரங்களைக் கொண்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட தேதிகளில் எல்லா நேரத்திலும் போக்குவரத்திற்கு தடைவதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசர மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இழுவை லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளன.
2ஆவது வகை வாகனங்களான பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் லோரிகள் , தேங்காய், ரப்பர் பால் மற்றும் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாத லோரிகளுக்கும் காலி லோரிகளை ஏற்றிச் செல்லும் லோரிகளுக்கும் பெருநாள் காலங்களில் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும், மூன்றாம் கட்ட வாகனங்களான நடமாடும் கிரேன்கள், சிமென்ட் கலவை லோரிகள் உள்ளிட்ட கட்டுமான வாகனங்களும் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



