
சீனா, டிசம்பர் 10 – சீனாவில் 8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவன் தனது தாயின் தங்க சங்கிலியைச் சிறு சிறு துண்டுகளாக்கி தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்த சம்பவம் அவனின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகுதான் சிறுவனின் தாய் அதனைக் கண்டறிந்துள்ளார். தனது மகனுடன் ஒரே வகுப்பில் பயிலும் மற்றொரு சிறுவனிடம் தங்க சங்கிலியின் துண்டு ஒன்று இருப்பதை தனது மகள் வாயிலாக கண்டறிந்த அவர் வீட்டின் CCTV காட்சிகளைக் கண்காணிக்க துவங்கியுள்ளார்.
அக்காணொளியில், சிறுவன் தனது தாயின் அலமாரியைத் திறந்து, தனது தந்தை திருமண நாள் பரிசாக தாயாருக்கு வாங்கி தந்த 8 கிராம் தங்கச் சங்கிலியை எடுத்து, அதனை வெட்டவும் எரிக்கவும் முதலில் முயன்றுள்ளான். பின்பு எதுவும் முடியாத நிலையில், தனது பற்களாலேயே அதனைக் கடித்து துண்டுகளாக்கியுள்ளான்.
5600 மலேசிய ரிங்கிட் மதிப்பிலான அத்தங்க சங்கிலியை, அவன் எத்தனை பேருக்கு எத்தனை துண்டுகளாக கொடுத்தான் என்று அவனுக்கே நினைவில்லாமல் போனதால், பெற்றோர் சங்கிலியின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே மீடட்டெடுத்தனர்.
இந்நிலையில் சிறுவனின் தாய் அவனிடம் தங்கம் எவ்வளவு விலையுயர்ந்தது தெரியுமா என வினவியபோது, சிறுவன் “தெரியாது” என்று கூறியதால், சிறுவனின் தந்தை அவனைத் தண்டித்ததாக அறியப்படுகின்றது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பல நகைச்சுவை கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.



