Latestமலேசியா

சீன அதிபரின் வருகை; சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் விரக்தி; காரணத்தை விளக்குகிறார் முன்னாள் போலீஸ்காரர் 

கோலாலம்பூர், ஏப்ரல்-17, சீன அதிபர் சீ சின் பிங்கின் 3 நாள் மலேசியப் பயணத்திற்காக கிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ராஜெயாவிலும் 17 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது அனைவரும் அறிந்ததே.

முன் கூட்டியே அது குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டாலும், போக்குவரத்து நெரிசல் குறித்து நேற்று முதல் வலைத்தளங்களில் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மக்கள் தான் அவதிப்படுவதாக பலர் அரசாங்கத்தைக் குறைக் கூறினர்.

என்றாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அவ்வாறு செய்யப்படுவதாக முன்னாள் போலீஸ்காரரான facebook பயனர் ஒருவர் வலைத்தளவாசிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

அந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறுமனே செய்யப்படுவதில்லை; மாறாக உலகப் பெருந்தலைவர்களுக்கான அனைத்துலகப் பாதுகாப்பு நடைமுறையின் ஒரு பகுதியாகும் அதுவென, Mohd Ezairol Rezan Zainol கூறினார்.

உலகத் தலைவர்கள் வருவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையான திட்டமிடலோடு நடைபெறும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ள உலகத் தலைவர்களைப் பாதுகாக்க ஏதுவாக, போக்குவரத்து கட்டுப்பாடு, ஆகாய மார்க்க கண்காணிப்பு, சிறப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் கண்காணிப்பு என உயர் மட்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் வரும் போது அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது உபசரணை நாட்டுக்குத் தான் அவமானம்.

நாடு பாதுகாப்பாற்றது என அவப்பெயர் எழுவதோடு, தூதரக உறவு, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகள் மீது எதிர்மறையான கண்ணோட்டம் எழுந்து விடும்.

எனவே தான், உலக வல்லரசு நாடான சீனாவின் அதிபர் சீ சின் பின் வரும் போது, இந்த அளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கின்றன.

எனவே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது; அவர்கள் நாட்டுக்காகப் பணியாற்றுகிறார்கள் என்றார் அவர்.

அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்துக் கொண்டு சீ சின் பிங் கம்போடியா கிளம்பியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!