
ஈப்போ, மார்ச்-16 – ஈப்போ, மேரு ராயாவில் உள்ள மேரு இடாமான் அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில் மூழ்கி, சீனாவைச் சேர்ந்த 17 வயது பையன் நேற்று உயிரிழந்தான்.
தீயணைப்பு மீட்புப் படை வந்து பார்த்த போது, 1.2 மீட்டர் ஆழமுள்ள அந்த நீச்சல் குளத்தின் அடியில் அம்மாணவனின் உடல் குறுக்காக அசைவற்றுக் கிடந்தது.
மருத்துவக் குழு வரும் வரை தீயணைப்பு வீரர்கள் CPR முதலுதவி சிகிச்சை வழங்கினர்.
எனினும், அங்குள்ள அனைத்துலகப் பள்ளி மாணவனான அப்பையன் உயிரிழந்ததை, சம்பவ இடம் விரைந்த மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
மாணவனின் சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.