
கோலாலம்பூர், ஜூலை 22 – இன்று காலை, அமைதிப் பேரவைச் சட்டம் 2012 மற்றும் தேசத்துரோகச் சட்டம் 1948 ஆகியவற்றை ரத்து செய்வதற்கான சீர்திருத்தங்களைக் கோரி நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கிட்டத்தட்ட 100 பங்கேற்பாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று, பேச்சு சுதந்திரம் என்பது ஒரு சலுகை அல்ல என்றும், மக்களுக்கு வழங்குவதாக வாக்களித்த மடானி அரசின் வாக்குறுதிகள் எங்கே என்றும் பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைப் பற்றிப் பேசும் அல்லது குரல் கொடுக்கும் ஆர்வலர்களை மௌனமாக்க தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டுமென்றும் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
குடியுரிமை, இடம்பெயர்வு, குற்றவியல் நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வது போன்ற உள்ளடக்கங்களை கொண்ட குறிப்பாணையை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.