
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – அடுத்த 6 மாதங்களில் அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்காவிட்டால், அமைச்சரவையில் தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் என DAP அறிவித்திருப்பது விநோதமாக இருப்பதாக, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ RT ராஜசேகரன் விமர்சித்துள்ளார்.
“அன்வார் அரசாங்கத்தை வீழ்த்த மாட்டோம், ஆனால் சீர்திருத்தம் வேகமாக நடக்க வேண்டும்” எனக் கூறும் DAP-க்கு இப்போது தான் ஞானோதயம் வந்ததா என்றார் அவர்.
3 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்து விட்டு, சபா சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு சீர்திருத்தம் கோரி DAP குரல் எழுப்புகிறது.
e-invoicing அமுலாக்கம், இந்திரா காந்தி வழக்கு, சீன இடைநிலைப் பள்ளிகளுக்கான UEC தேர்வு சான்றிதழ் அங்கீகாரம், SOSMA சட்டத் திருத்தம் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து இதுநாள் வரை மௌனம் காத்து விட்டு, இப்போது திடீரென DAP தலைவர்கள் அறிக்கை விடுகின்றனர்.
DAP தலைவர்கள் அமைச்சர்களாகவும் துணையமைச்சர்களாவும் உள்ள அமைச்சுகளின் திட்டங்களில் நிலவும் குளறுபடிகளையும் சொல்லத் தேவையில்லை.
ஆக, சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு சீர்திருத்தம் குறித்து DAP கேள்வி எழுப்புவதும், தன்னை ‘ஹீரோவாக’ காட்சிக் கொள்ள பழியைத் தூக்கி பிரதமர் அன்வார் மீது போட முயலுவதும், அப்பட்டமாகத் தெரிகிது.
இது, அடுத்த பொதுத் தேர்தலுக்கு மக்கள் ஆதரவை பெறும் அரசியல் நாடகமே இன்றி வேறொன்றுமில்லை என ராஜசேகரன் காட்டமாகக் கூறினார்.



