
கோலாலம்பூர், பிப் 28 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது எஞ்சிய சிறை தண்டணைக் காலத்தை வீட்டு காவலில் கழிப்பது தொடர்பான துணை ஆணை குறித்து விவாதிப்பதை அனைத்து தரப்பினரும் நிறுத்திவிட்டு சட்ட நடைமுறையை மதிக்க வேண்டும் என மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அல் சுல்தான் அப்துல்லா ( Al Sultan Abdullah) கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற நடைமுறையில் இருப்பதால் அதற்கு அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த துணை ஆணை பொறுப்பான மற்றும் நம்பிக்கையான தரப்புகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
எனவே, அனைத்து தரப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட ட செயல்முறைகள் மற்றும் சட்டங்களை மதிக்க வேண்டும்.
குழப்பம் அல்லது தேவையற்ற விவாதங்களை உருவாக்குவதை தவிர்ப்பதோடு எந்தவொரு பிரச்னையையும் தீர்ப்பதில் நேர்மை, நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவற்றின் மதிப்புகளை நிலைநிறுத்துமாறு அனைவரையும் தாம் கேட்டுக்கொள்வதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அல் சுல்தான் அப்துல்லா தெரிவித்தார்.
தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் பேரரசர் பிறப்பித்த துணை ஆணையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை நிர்பந்திக்க நீதித்துறை மறு ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க மேல் முறையீட்டு நீதிமன்றம் நஜீப்பிற்கு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சட்டத்துறை தலைவரின் மேல் முறையீடு மனு மீதான விசாரணைக்கான தேதியை மார்ச் 24ஆம்தேதிக்கு கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.