
சுங்க பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோ பூர்வக்குடி கிராமத்தில் வீட்டருகே 19 மாத ஆண் குழந்தை இறந்துகிடந்த சம்பவத்திற்கு நாய்கள் கடித்துக் குதறியதே காரணமெனக் கூறப்படுகிறது.
மாவட்ட போலீஸ் தலைவர் Hafiz Nor அதனைக் கோடிகாட்டினார். முன்னதாக இரத்தக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய சுங்கை பூலோ மருத்துவமனை, அது குறித்து போலீஸில் புகார் செய்தது.
குழந்தையின் தலை மற்றும் உடம்பில் கடிபட்ட தளும்புகள் இருந்தது மருத்துவமனை மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.
குழந்தையை அதன் மாமாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு வேலைக்குச் சென்ற பெற்றோர், பின்னர் வீடு திரும்பிய போது, கதவு திறந்திருந்து குழந்தையும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சுற்றுப்புறத்தில் தேடியதில் 20 மீட்டர் தொலைவில் குழந்தை சுயநினைவின்றி கிடந்தது. சுற்றி சில நாய்கள் அமர்ந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.
குழந்தையைப் பார்த்துக் கொள்வார் என பெற்றோர் நம்பிய அதன் மாமா சம்பவத்தின் போது வீட்டின் வரவேற்பறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.