
செபராங் பிறை, ஆகஸ்ட்-10 – பினாங்கு, கெப்பாளா பத்தாஸில் Jalur Gemilang தேசியக் கொடி தலைக்கீழாக பறக்க விடப்பட்ட சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.
புகார்தாரர் மற்றும் சந்தேக நபரிடம் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் தலைவர் Anuar Abd Rahman தெரிவித்தார்.
வீட்டு உபகரணங்களை விற்கும் கடையின் உரிமையாளரான 59 வயது Pang Chin Tian, மற்றும் கடைப் பணியாளர் ஒருவர் நேற்று மாலை வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Pang, தேசியக் கொடி தலைக்கீழாக இருந்ததை தாம் கவனிக்கவில்லை என்றும், தவற்றை உணர்ந்ததும் உடனடியாக அதனை இறக்கி சரி செய்ததாகவும் சொன்னார்.
இருந்தாலும் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
முன்னதாக வைரலான வீடியோவில் சந்தேக நபர் கொடியைத் தலைக்கீழாக பறக்க விடுவதும், அதனை இன்னொருவர் வீடியோவில் பதிவு செய்வதும் தெரிந்தது.
இதையடுத்து, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டி போலீஸ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெர்தாம் (Bertam) சட்டமன்ற உறுப்பினர் Reezal Merican Naina Merican புகார் செய்தார்.
இவ்வேளையில், விசாரணை நடந்து வருவதால், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் அவ்விவகாரத்தை ஊதி பரிதாக்க வேண்டாம் என போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.