
வாஷிங்டன், மார்ச்-9 – வெறும் ஒரு வாரப் பயணமாக விண்வெளிக்குச் சென்று, 9 மாதங்களாக அங்கேயே சிக்கிக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உட்பட 2 அமெரிக்க விண்வெளி வீரர்களை, முன்னாள் அதிபர் ஜோ பைடனும் துணை அதிபர் கமலா ஹாரீஸும் ‘அம்போ’ என விட்டு விட்டனர்.
ஆனால் நான் அப்படி விட மாட்டேன், இருவரையும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவேன் என அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை Space X உரிமையாளர் இலோன் மாஸ்கிடம் டிரம்ப் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் கடந்தாண்டு ஜுன் 5-ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் குறித்த நேரத்தில் பூமி திரும்ப முடியாமல் போனது; எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை பலனளிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் திட்டத்தின் படி, சுனிதாவும் வில்மோரும், மார்ச் 19 அல்லது 20-ஆம் தேதியில் பூமிக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது டிரம்ப் சுனிதா வில்லியம்ஸ் முடியின் தோற்றம் குறித்தும் கருத்துரைத்தார்.
“கடினமான, நல்ல உறுதியான முடியைக் கொண்ட பெண்ணை நான் பார்க்கிறேன். நான் கிண்டலடிக்கவில்லை. அவரது முடியைப் பற்றி விளையாட ஏதுமில்லை” என டிரம்ப் கூறினார்.
தனக்கே உரித்தான பாணியில் டிரம்ப் அவ்வாறு கூறியிருந்தாலும், அமெரிக்க வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிகின்றன.
இந்திய வம்சாவளி பெண்ணான சுனிதா மீதான இனவாத தாக்குதல் என, அவரின் தீவிர ஆதவாளர்கள் X தளத்தில் கொந்தளிக்கின்றனர்.
இது ஒரு முட்டாள்தனமான பேச்சு என ஒருவர் காட்டமாக பதிவிட்ட வேளை, அண்மைய காலமாகவே இது போல் வினோதமாக பேசுவது இந்த மனிதருக்கு பழகி விட்டதென இன்னொருவர் சாடினார்.
ஆனால், டிரம்ப் தனது வழக்கமான ‘நகைச்சுவை’ பாணியில் பேசியதை சர்ச்சையாக்க வேண்டாம் என்றும், சுனிதாவை பூமிக்கு அழைத்து வர அவர் மேற்கொள்ளும் முயற்சியைப் பாராட்டுங்கள் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.