கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; நீதி விசாரணைக்கு முதல் அமைச்சர் உத்தரவு

பிரயாக்ராஜ், ஜனவரி-30 – இந்தியா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த வேளை, 60 பேர் காயமடைந்துள்ளனர்.
கும்பமேளாவின் முக்கிய நாட்களில் ஒன்றான, மவுனி அமாவாசையான நேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது திரிவேணி சங்கமத்தை நோக்கி பக்தர்கள் தடைவேலிகளை உடைத்து திடீரென முன்னேற முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தள்ளு முள்ளுவில் சிக்கியும், மிதிபட்டும், மூச்சுத் திணறியும் உயிர் பலி ஏற்பட்டது.
இந்நிலையில் அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனியாகப் போலீஸ் விசாரணையும் தொடருமென்றார் அவர்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து 40 கோடி பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அரசாங்கம் ஏற்பாடுகளில் மெத்தனமாக செயல்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
முன்னதாக, பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடங்களில் எரிவாயு தோம்புகள் வெடித்து பெரும் தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய ஆன்மீகக் கூட்டமான இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.