
கோலாலம்பூர், பிப்ரவரி-22 – பதிவுப் பெற்ற சுற்றுலா முகவர் நிறுவனங்களைத் தேடும் போது, போலி இணையத் தளங்கள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு, சுற்றுலா,கலை,பண்பாடு அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத் தளம் எனக் கூறிக் கொண்டு 2 போலி இணையத் தளங்கள் உலா வருவதை அடுத்து இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
https://www.motacgov.com/semakan/tobtab/#/ மற்றும் https://www.motacgov.com/#/ ஆகிய அவ்விரு போலி இணையத் தளங்களும் பொறுப்பற்ற தரப்பினரால் உருவாக்கப்பட்டுள்ளன.
தவறான தகவல்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றுவதும் அமைச்சால் அங்கீகரிக்கப்படாத சேவைகளை வழங்குவதுமே அவற்றின் நோக்கமாக இருக்கலாம்.
இது மோசடிகளுக்கு இட்டுச் செல்லலாம் என்பதால் அமைச்சு இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறது.
உரிய அதிகாரத் தரப்பின் ஒத்துழைப்புடன் அவ்விரு போலி இணையத் தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவுப் பெற்ற சுற்றுலா முகவர் நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் குறித்த தகவல்களை, https://www.motac.gov.my/ என்ற அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் மட்டுமே பெற முடியும்.
அப்படி யாராவது சந்தேகத்திற்குரிய இணையத் தளங்களை கண்டாலோ அல்லது அவற்றால் மோசடி செய்யப்பட்டிருந்தாலோ, பொதுப் புகார் மேலாண்மை முறையான SISPAA-வை https://motac.spab.gov.my/ என்ற முகவரியில் அணுகலாம்.
ukk@motac.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் 03-8000 8000 என்ற hotline எண்களுக்கு அழைத்தும் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.