
பாங்கி, ஜனவரி 12 – மலேசிய மனிதவள அமைச்சான KESUMA, VISIT MALAYSIA 2026 அதாவது VM2026 முயற்சிக்கு ஆதரவாக, சுற்றுலா துறையில் பணியாற்றும் 10,000 பேருக்கு இலவச தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார (KKP) அடிப்படை பயிற்சியை வழங்க உள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், சுற்றுலா துறைக்கான இந்தப் பாதுகாப்பு அறிமுகப் பயிற்சி (SITI) திட்டத்தை, தேசிய தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான NIOSH, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சான MOTAC-வுடன் இணைந்து நடத்தும் என்று கூறினார்.
இந்த பயிற்சி, சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா தொழில் நடத்துநர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தங்குமிட வழங்குநர்கள் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் விபத்துகளைத் தடுப்பது, அபாயங்களை கட்டுப்படுத்துவது மற்றும் 2022 தொழிலாளர் பாதுகாப்பு சட்டத் திருத்தங்களை பின்பற்றுவது குறித்து பயிற்சி வழங்கப்படும்.
7 மணி நேரம் நீடிக்கும் இந்த பயிற்சி, ஆன்லைன் அல்லது நேரடியாக நாடு முழுவதும் உள்ள NIOSH மையங்களில் நடைபெறும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் செல்லுபடியாகும் டிஜிட்டல் பாதுகாப்பு பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் காப்பீட்டு பாதுகாப்பும் கிடைக்கும்.
இந்த திட்டம், மலேசிய மடானி கொள்கையின் நிலைத்தன்மை, நலன் மற்றும் கருணை ஆகிய மதிப்புகளுடன் ஒத்துப்போகும் என்றும், VM2026 மூலம் 47 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுமார் 100 பில்லியன் ரிங்கிட் வருவாயை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பயிற்சி விபத்து தடுப்பு, சட்ட விதிமுறைகள், சுற்றுலா துறையில் உள்ள அபாயங்கள், அபாயக் கட்டுப்பாடு மற்றும் இறுதி மதிப்பீடு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று NIOSH நிர்வாக இயக்குநர் Dato’ Haji Ayop Salleh கூறியுள்ளார்.



