
கோலாலம்பூர், மார்ச்-29-
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் சூடுபிடித்துள்ளது.
தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி இருவரும் இம்முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
இந்நிலையில் மூன்றாவது முக்கியப் பதவியான உதவித் தலைவர் பதவிக்கு ஏற்கனவே எழுவர் குறி வைத்துள்ள நிலையில், எட்டாவது நபராக Dr சத்தியா பிரகாஷ் அப்பதவிக்குப் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண், இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் ச்சாங் லீ காங், அன்வாரின் புதல்வி நூருல் இசா ஆகியோர் பதவிகளைத் தற்காத்துக் கொள்ளப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
கடந்த கட்சித் தேர்தலுக்குப் பிறகு நூருல் இசாவோடு சேர்த்து உதவித் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட மேலும் இருவரான ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சபா, புத்தாத்தான் முன்னாள் எம்.பி அவாங் ஹுசாய்னி சஹாரி இதுவரை தங்கள் முடிவை அறிவிக்கவில்லை.
புது வரவாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இருவரும் போட்டியில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், எட்டாவது நபராக பி.கே.ஆர் கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் Dr சத்ய பிரகாஷ் நடராஜன் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட முன் வந்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு போட்டியிட முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் தொகுதித் தலைவருமான Dr சத்தியா, மேலும் ஏராளமான இளையோரையும் நிபுணர்களையும் கட்சியில் சேர்ப்பதே தனது குறிக்கோள் என்றார்.
பி.கே.ஆர் கட்சி அமைப்பு விதிகளின் படி, 4 உதவித் தலைவர்கள் உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; இனவாரியான பிரதிநிதித்துவத்தை உறுதிச் செய்யும் வகையில் மேலும் மூவர் கட்சித் தலைவரால் அப்பதவிக்கு நியமிக்கப்படுவது வழக்கமாகும்.
பி.கே.ஆர் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கானத் தேர்தல் மே 24-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது