
இஸ்கண்டர் புத்ரி, செப் 11 – செகாமட் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பலவீனமான நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 62 குடும்பத் தலைவர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு கூடியபட்சம் 3,000 ரிங்கிட் உதவியை ஜோகூர் மாநில அரசாங்கம் வழங்கும்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான (Nadma ) மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் இந்த உதவி விநியோகிக்கப்படும் என்று ஜோகூர் மந்திரிபெசார் ஒன் ஹபிஸ் காசி ( Onn Hafiz Ghazi ) தெரிவித்தார்.
செகாமட் பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 62 வீடுகள், இரண்டு தொழுகை இடங்கள், மற்றும் ஒன்பது அரசு வளாகங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 24 ஆம்தேதியன்று ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு, செகாமட் மாவட்ட அதிகாரிகள் அனைத்து நிறுவனங்கள், பெங்குலு மற்றும் கிராமத் தலைவர்களையும் ஒரு சிறப்பு கூட்டத்தின் மூலம் உடனடி மதிப்பீட்டைச் செய்யவும், எதிர்கொள்ளும் சேதத்தை மதிப்பிடவும் தகவல்களைத் திரட்டினர்.
வீடுகளைப் பாதித்த குடும்பங்களே அதிக சுமையைச் சுமக்கின்றன என்பதை மாநில அரசு அறிந்திருக்கிறது என மாநில சட்டமன்ற அமர்வில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது, பேரழிவு தொடர்பாக எட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது மந்திரிபெசார் கூறினார்.
அனைத்து அரசு கட்டிடங்களும் பயன்படுத்த இன்னும் பாதுகாப்பாக இருப்பதை பொதுப்பணித் துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உறுதிப்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.