
செத்தியா ஆலாம், மார்ச் 13 – இயக்கத்தில் இருந்த காருடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 45 நிமிடத்திற்குப் பிறகு பத்திரமாக கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று காலை 6.55 மணியளவில் செத்தியா ஆலாமில் நிகழந்தது.
அச்சிறுமி தூங்கிக் கொண்டிருந்ததால், அவரின் தங்கையை அச்சிறுமியின் தாயார், பாலர் பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருந்த நிலையில், வேறு வழியின்று பள்ளியின் முன்புறம் காரை இயங்கிய நிலையில் விட்டுச் சென்ற தாயார் திரும்பி வந்தபோது காரும் மகளும் காணாமல் போயிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, காலை மணி 7.06 அளவில் போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட, 7.45 மணியளவில் பொதுமக்களின் உதவியுடன் அந்தக் கார் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியும் காரும் கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டரொ தூரத்திலொ ஒரு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் அந்தக் கார் இருப்பதாக தகவல் கிடைத்ததாக ஷா ஆலாம் போலிஸ் தலைவர் Mohd Iqbal Ibrahim தெரிவித்துள்ளார்.
தொடக்கக்கட்ட விசாரணையில், காரை திருடும் முயற்சியில் சம்பந்தப்பட்ட ஆடவன் ஈடுபட்டதாகவும் ஆனால் காரில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்கவே பயந்துப் போன அவ்வாடவன் காரை அப்படியே விட்டுச் சென்றதாக போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் காரில் இருந்த அக்குழந்தையின் தாயாரின் பணப்பை, இரண்டு கைப்பேசிகள் என மொத்தம் 2000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளான்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் போலிஸை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.