
சென்னை, மார்ச்-22 – சுற்றுலா விசா முடிந்தும் சென்னையில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்ததால் குடிநுழைவு அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மலேசியர், விரைவிலேயே நாடு திரும்புகிறார்.
சென்னையில் உள்ள மலேசியப் பேராளரக உயரதிகாரி (Consulate General) கே.சரவணகுமார் முயற்சியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேராளகத்தின் தலையீட்டின் பலனாக, சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலகமான FRRO, நவீன்ராஜ் எனும் அவ்விளைஞர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற அனுமதியளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் கடந்த 18-ஆம் தேதி முதலே நவீன்ராஜ்-உடன் தொடர்பில் இருந்ததாகவும் FRRO-வின் துணை இயக்குனர் கார்த்திகாவோடு தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் அவர் நாடு திரும்புவதற்கான இணக்கம் காணப்பட்டதாகவும் சரவணகுமார் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
மலேசியப் பேராளரகம் அதன் நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருமென, அவர் மேலும் கூறினார்.
தென்னிந்தியாவில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே பேராளரகத்தின் முன்னுரிமை என்றார் அவர்.
தனது நண்பரான நவீன்ராஜை, சென்னைக் குடிநுழைவு அலுவலக அதிகாரிகள் தாக்கியதாக, பிரபல ராப் இசைப் பாடகர் அசல் கோலார் குற்றம் சாட்டி முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
நவீனை விசாரிக்கச் சென்ற அதிகாரிகள் அவரை தாக்கியதோடு, போதைப்பொருள் வைத்திருக்கிறாயா என்றும் கீழ்த்தரமாகக் கேட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
கைப்பேசியைப் பறித்துக்கொண்டதோடு பயணப் பத்திரங்களின் அசல் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டதாக அவர் கூறிய வீடியோ வைரலானது.