
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – இந்தியர்களின் மனம் புண்படும் படி நடந்துகொண்டுள்ள செப்பாங் சாலையோர சோள வியாபாரி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்த நிந்தனையாக இதைக் கருதி போலீஸார் விசாரிக்க வேண்டுமென, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
நடவடிக்கைகள் கடுமையானால் தான், இது போன்ற இனவெறி சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதைத் தவிர்க்க முடியுமென்றார் அவர்.
அந்த சோள வியாபாரி, “இங்கு கெலிங்கிற்கு சோளம் கிடையாது” என அநாகரீகமாக அறிவிப்பு வைத்து வைரலான சம்பவம் குறித்து சஞ்சீவன் கருத்துரைத்தார்.
அவ்வியாபாரியின் செயலுக்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இனவெறிக்கு இந்நாட்டில் இடமில்லை; அவ்விஷயத்தில் சமரசப் போக்கே கிடையாது என, முன்னதாக அவ்விவகாரம் குறித்து பேசிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.