
கோலாலம்பூர், பிப் 27 – அடுத்த ஆண்டு பினாங்கு தைப்பூச கொண்டாத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்ள வேண்டும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான R.S.N ராயார் அழைப்பு விடுத்தார்.
அண்மையில் பத்துமலை தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் பத்துமலைக்கு வருகை புரிந்து கூட்டரசு அரசாங்கத்தின் சார்பாக 2 மில்லியன் ரிங்கிட் மான்யம் வழங்கியது குறித்து அன்வாருக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய தலைமை கணக்காய்வாரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட ராயர் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மலேசியாவில் பத்துமலை தைப்பூச கொண்டாட்டத்திற்கு அடுத்து அதிக அளவில் இந்து பக்தர்களையும் சுற்றுப்பயணிகளையும் பினாங்கு மாநில தைப்பூச கொண்டாட்டம் கவர்ந்துள்ளது.
எனவே பினாங்கு தைப்பூச விழாவிலும் பிரதமர் அன்வார் கலந்துகொண்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் கூட்டரசு அரசாங்கத்தின் மான்யமாக 2 மில்லியன் ரிங்கிட் வழங்க வேண்டும் என ராயர் கேட்டுக்கொண்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு வழங்கப்படும் மான்யத்திறகு முறையாகவும் வெளிப்படையாகவும் அரசாங்க தலைமை கணக்காய்வாளர் துறைக்கு கணக்கு காட்டப்படும் என்ற உறுதியை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்வதாக ராயர் தெரிவித்தார்.
இதனிடையே பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு இதற்கு முன் தலைவராக இருந்தவரின் நிர்வாகத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பினாங்கு அறப்பணி வாரியத்தின் தலைவர் என்ற முறையில் தாம் புகார் செய்துள்ளதாகவும் இதுகுறித்து MACC விசாரணை நடத்தியபோதிலும் முறைகேடுகள் குறித்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராயர் கேட்டுக்கொண்டார்.