
கோலாலாம்பூர், டிசம்பர் 19-சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO திட்டங்களின் கீழ் உள்ள 4 சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும், வரும் ஜனவரி 1 முதல் இணையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
1969 தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2017 சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2017 வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை சட்டம் மற்றும் 2022 இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை அச்சலுகைகள் உள்ளடக்கியுள்ளன.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அதனைத் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை நாடு முழுவதும் சந்தா பங்களிப்பாளர்கள் மற்றும் பயனர்களுக்கு சேவையளிப்பையும் அணுகலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த கொள்கை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
மலேசியாவில் பல்துறைகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு சிறந்த சேவைகளை உறுதி செய்வதற்காக, தாம் அவ்வுத்தரவு வழங்கியதாக ரமணன் சொன்னார்.
மனிதவள அமைச்சரான பிறகு இன்று PERKESO தலைமையகத்துக்கு முதன் முறையாகச் சென்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.



