
கிள்ளான், டிசம்பர் 15 – ஜனவரி 1 முதல், கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர அட்டவணையின் படி, KTM ரயில் சேவைகள் இயங்கும் என்று மலேசிய ரயில் சேவை நிறுவனமான KTMB அறிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இரண்டாம் கட்ட இரட்டை பாதை (KVDT2) மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போர்ட் கிள்ளானிலிருந்து KL Sentral வரையிலான வழித்தடத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படாது.
எனினும், காலை மற்றும் மாலை நேரங்களில் போர்ட் கிள்ளானிலிருந்து கோலாலம்பூர் வரையிலும் தஞ்சோங் மாலிமிலிருந்து கோலாலம்பூர் வரையிலுமான வழித்தடங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என்றும் KTMB குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதிய நேர அட்டவணையின் படி, காலை நேரத்தில் தஞ்சோங் மாலிமிலிருந்து போர்ட் கிள்ளான் வரையில் இரண்டு ரயில் சேவைகளும், ஷா ஆலம் நோக்கி ஒரு ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சுபாங் ஜெயாவிலிருந்து போர்ட் கிள்ளான் வழித்தடம் வரையிலும் மற்றும் பாதிக்கப்பட்ட இடைநிலையங்களில் வழங்கப்பட்டு வந்த ‘ஷட்டில்’ பேருந்து சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.
Pulau Sebang-கிலிருந்து பத்துமலை வரையில் இரு வழி பயண வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில் 30 நிமிட இடைவெளி சேவை தொடரும்.
இந்த மேம்பாட்டு மேம்பாட்டு பணிகள் 2029ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய நேர அட்டவண, KITS STYLE செயலி அல்லது KTMB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.



