
கோலாலம்பூர், பிப்ரவரி-23- நேற்று காலை கோலாலம்பூர் தித்திவங்சா LRT நிலையத்தில் ஏற்பட்ட மரண விபத்தை அடுத்து, இரயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த போக்குவரத்து அமைச்சு உறுதியளித்துள்ளது.
கண்பார்வையற்றவர் என நம்பப்படும் ஓர் ஆடவர் நேற்றையச் சம்பவத்தில் தண்டவாளத்தில் விழுந்து இரயில் மோதி உயிரிழந்தார்.
அதனை விரிவாக விசாரிக்க Prasarana நிறுவனம் பணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அனைத்து இரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அமைச்சர் அந்தோனி லோக் உத்தரவிட்டுள்ளார்.
இரயில் நிலையங்களில் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்களை கண்டறிந்து அவற்றை தடுத்திட ஏதுவாக, விவேக CCTV கேமரா முறையும் பொருத்தப்படவிருக்கின்றது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அனைத்து LRT நிலையங்களிலும் நீண்டகால அடிப்படையில் நடைமேடை திரைக் கதவுகள் (platform screen doors) பொருத்தவும் Prasarana திட்டமிட்டுள்ளது.
இவ்வேளையில், கூடுதல் உதவிகள் தேவைப்படுவோர், இரயில் நிலையங்களில் உள்ள Prasarana அதிகாரிகள் அல்லது உதவி போலீஸாரை அணுகுமாறும் அமைச்சர் அறிவுறுத்தனார்.
அனைத்து மலேசியர்களுக்கும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பயனர் தோழமையான பொது போக்குவரத்து அமைப்பை உறுதி செய்யும் அரசாங்கத்தின் கடப்பாட்டை அந்தோனி லோக் மீண்டும் உறுதிப்படுத்தினார்.