கோலாலம்பூர், செப்டம்பர் 6 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள முழுப் பகுதியும் பாதுகாப்பானது என கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மைமூனா மொஹமட் ஷாரிஃப் (Datuk Seri Dr Maimunah Mohd Sharif) உறுதியளித்துள்ளார்.
விஸ்மா யாகினிலிருந்து காவல் நிலையம் வரை சுமார் 200 மீட்டர் வரை மட்டுமே பாதைகள் மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தடுப்புகளால் தடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அப்பகுதியிலுள்ள கடைகளோ கட்டிடங்களோ செயல்படுவதை நிறுத்த உத்தரவிடப்படவில்லை என்ற அவர் கூறினார்.
மக்கள் இன்னும் நடைபாதையில் வந்து பொருட்களை வாங்கலாம் என்றும், இது குறித்த ஜாலான் மஸ்ஜிட் இந்தியப் பகுதியிலுள்ள வர்த்தகர்கள் சங்கத்தையும் சந்தித்து, இடம் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதையும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி அன்று, மஸ்ஜிட் இந்தியாவில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி எனும் 48 வயது மாது ஒருவர், நில அமிழ்வால் ஏற்பட்ட குழியில் சிக்குண்டு காணாமல் போனார்.
அதனை தொடர்ந்து, ஒன்பது நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் எந்தக் கண்டுபிடிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது.