
கோலாலம்பூர், மார்ச்-23 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர, அனைவரும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
சுமூகத் தீர்வுக்கான அம்முயற்சியில் குழப்பங்களைத் தவிர்க்க அது அவசியமென, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
வெளியிலிருக்கும் நாம், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வழி விட வேண்டுமே தவிர, தேவையற்றதை பேசி நிலைமையை மோசமாகக் கூடாது என்றார் அவர்.
அனைவரும் அறிந்தது போல இது அரசாங்க நிலமல்ல; தனியாருக்குச் சொந்தமான நிலம்.
ஆகவே, இரு தரப்புகளும் அதை நல்ல முறையில் பேசித் தீர்த்துகொள்ள வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில், அவ்விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் மோசமான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லை மீறியக் கருத்துகளைப் பதிவிடுவோருக்கு தக்க தண்டனைக் காத்திருப்பதாகவும் டத்தோ ஃபாஹ்மி எச்சரித்தார்.
Jakel குழுமத்திற்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள அக்கோயிலை பொருத்தமான வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில், அந்நிறுவனத்துக்கும் ஆலய நிர்வாகத்துக்கும் இடையில் நல்லிணக்க முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது.
கோயில் இடமாற்றம் சுமூகமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்ய, DBKL மத்தியஸ்தம் செய்து வருவதாக கோலாலம்பூர் மாநகர மேயர் டத்தோ ஸ்ரீ மைமூனா மொஹமட் ஷாரிஃப் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.