
சென்னை, பிப்ரவரி-17 – மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், தமிழக அரசின் உடைமையாகியுள்ளன.
1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த தி.மு.க அரசால் ஜெயலலிதா மீது வழக்குப் போடப்பட்டது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நகைகள், சொத்து பத்திரங்கள், புடவைகள், கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது சென்னை குடியிருப்பான வேதா நிலையம், நிலப் பகுதிகள், தோட்டங்கள், வங்கி வைப்புத்தொகை மற்றும் 1991 ஜூலை மற்றும் 1996 ஏப்ரலுக்கு இடையில் பறிமுதல் செய்யப்பட்ட மதிப்புமிக்க பொருட்களும் அவற்றில் அடங்கும்.
அவ்வழக்கு கர்நாடக மாநில நீதிமன்றத்தில் நடைபெற்றதால் அவையனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் இருந்தன.
இந்நிலையில், அவற்றை தமிழக அரசியம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவு வந்ததால், பெங்களூரைச் சேர்ந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று தமிழகம் வந்து அவற்றை ஒப்படைத்தனர்.
அவ்வகையில், 27 கிலோ 558 கிராம் தங்க நகைகள், 1,116 கிலோ வெள்ளி, 1,526 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
சில நகைகளில் வைரம், மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட கற்கள் இருந்தன.
அதோடு, 2 கிலோ ஒட்டியாணம், 1 கிலோ வைர கிரீடம், ஒன்றரை கிலோ தங்க கத்தி, 60 கிராம் எடையுள்ள தங்க பேனா, தங்க கைக்கடிகாரம், தங்க வாள், காசு மாலையும் இருந்தன.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து அபராதத்தைச் செலுத்துமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், 2016-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் ஜெயலலிதா காலமானார்.