ஜோகூர் பாரு, டிச 4 – ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரியில் அழைப்பு மையமாக பயன்படுத்தப்பட்ட இரண்டு அலுவலக வளாகங்களை சோதனை செய்த பின்னர், இணைய சூதாட்ட கும்பல் மற்றும் போலி வேலை வாய்ப்பு கும்பலைச் சேர்ந்த 35 வெளிநாட்டினர் உட்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர். வர்த்தக குற்றவியல் விசாரத்துறை மேற்கொண்ட முதல் சோதனை நடவடிக்கையில் 80,000 ரிங்கிட் மற்றும் 2 ஆவது சோதனை நடவடிக்கையில் 145,000 ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் M. குமார் தெரிவித்தார். இணைய சூதாட்ட அழைப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில் 26 முதல் 44 வயதுக்குட்பட்ட 18 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அங்கு 27 கை தொலைபேசிகள், 18 மடிக் கணினிகள். 12 மானிட்டர்கள், இணைய சேவைக்கான 3 மோடம்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இணைய சூதாட்ட கும்பல் கடந்த மாத தொடக்கத்தில் செயல்படத் தொடங்கியதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்களுக்கான ஆன்லைன் சூதாட்ட விண்ணப்பங்களை உருவாக்கி விற்பனை செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டது. இரண்டாவது நடவடிக்கையில் இல்லாத வேலைகளுக்கு வேலை வழங்குவதாக கூறி ஆவணங்கள் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 53 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடமிருந்து 53 கை தொலைபேசிகள் மற்றும் 23 கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக குமார் கூறினார்.