
கோலாலாம்பூர், அக்டோபர்-22, இணையம் வாயிலாக கைப்பையை வாங்கி ஏமாறும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஈராண்டுகளில் மட்டும் அத்தகைய 242 மோசடி சம்பவங்களில் 30 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசூஃப் ( Datuk Seri Ramli Mohamed Yoosuf) தெரிவித்தார்.
கடந்தாண்டு 137 மோசடி சம்பவங்களில் 21 லட்சம் ரிங்கிட் நட்டமேற்பட்டது.
இவ்வாண்டு, செப்டம்பர் வரையில் 105 சம்பவங்களில் 918,063 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
அண்மையில் கூட, இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆடம்பர கைப்பை என விளம்பரம் செய்யப்பட்ட கைப்பையை வாங்கி பெண்ணொருவர், ஐயாயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பார்ப்பதை வைத்து மட்டுமே முடிவுக்கு வந்து விடும் மக்கள், சரிபார்க்காமல் பொருட்களுக்கு முன்பதிவு செய்து விடுகின்றனர்.
பின்னர், பொருள் கைக்கு வந்த பிறகே, தாங்கள் வாங்கியப் பொருள் அதுவல்ல என உணருகின்றனர்.
சில சம்பவங்களில், கட்டியப் பணத்துக்கு பொருளே வந்து சேருவதில்லை.
இது போன்று ஏமாறுவதைத் தவிர்க்க, பொது மக்கள் இணையம் வாயிலாக பொருட்களை வாங்கும் போது, முறையாகப் பதிவுப் பெற்றத் தளங்களிலிருந்தோ அல்லது பணத்துக்கு உத்தரவாதமுள்ள வியாபாரிகளிடமிருந்தோ பொருட்களை வாங்குமாறு டத்தோ ஸ்ரீ ரம்லி அறிவுறுத்தினார்.