
பத்து பஹாட், மார்ச் 12 – ஒழுக்க விழுமியங்களையும், நற்பண்புகளையும் ஊக்குவிக்கும் விதமாக ஜோகூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நன்னெறி விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
பத்து பகாட், உயர் தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற இந்த விழாவை சுல்தானா ரொகாயா அறவாரியத்தின் தலைவர் சார்ஜன் டத்தோ சுகுமாரன் ராமன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
தமதுரையில் ஜோகூர் மாநில மலேசிய இந்து சங்கம், கடந்த 27 ஆண்டுகளாக இவ்விழாவை செம்மையாக நடத்தி வருவதற்கும் சமயத்தோடு நன்னெறி பண்புகளையும் மாணவர்களுக்கு இப்போட்டியின் வாயிலாக ஊட்டி வருவதற்கும் மனமார பாராட்டியதோடு 10,000 ரிங்கிட் நன்கொடையையும் வழங்கினார்.
மேலும் ஏற்பாட்டுக் குழு தலைவர் திலகவதி, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் காந்தன் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டதோடு மாநில சமயப் பிரிவு தலைவர் தொண்டர்மணி மு.மோகனதாசுக்கு “சிறந்த கவிஞர்” விருது வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாநிலத் தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் மற்றும் தேசிய துணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.
இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களோடு சுமார் 500 பேர் கலந்துக் கொண்டனர்.