ஜோகூர் பாரு, ஜனவரி-1 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் சாலையோரத்தில் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்த ஜோடி, காரில் 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளுடன் சிக்கியது.
டிசம்பர் 28-ஆம் தேதி தாமான் முத்தியாரா ரீனியில் சாலையோரமாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த கறுப்பு நிற வாகனத்தைப் போலீஸ் நெருங்கிய போது, அவர்களின் குட்டு அம்பலமானது.
31 மற்றும் 33 வயதுடைய அந்த ஆணும் பெண்ணும், போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
நடமாடும் சேமிப்புக் கிடங்காக செயல்படும் வாகனங்களில் அக்கும்பல் உள்ளுரில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
மொத்தமாக சரக்குகளை வாங்கி, சிறு சிறு பேக்கேட்டுகளில் போட்டு 200 முதல் 300 ரிங்கிட் விலையில் அந்த ஜோடி போதைப்பொருளை விற்று வந்துள்ளது.
இந்நிலையில் அந்த மொத்த வியாபாரி யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடப்பதாக குமார் சொன்னார்.
சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.