
ஜோகூர் பாரு, ஜன 13 – ஜோகூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கான 2024 ஆம் ஆண்டு பாரதியார் கிண்ண காற்பந்து போட்டியில் ஜோகூர் பாரு துன் அமினா தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகைசூடியது. ஜோகூர் பாரு காற்பந்து சங்கத்தின் ஒத்துழைப்போடு மாசாய் First Touch காற்பந்து கிளப் ஏற்பாடு செய்த இப்போட்டியில் ஜோகூர் மாநிலத்திலிருந்து 10 தமிழ்ப் பள்ளிகள் கலந்துகொண்டன. இறுதியாட்டத்தில் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர் குழு யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி குழுவை வென்று வெற்றியாளர் கிண்ணத்தை தட்டிச் சென்றது. மிகவும் சிறப்பான முறையில் லீக் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம்தேதி தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி சனிக்கிழமையுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இரண்டு பிரிவுகளாக இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற நான்கு அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்று பின்னர் இறுதியாட்டத்திற்கு துன் அமினா குழுவும் யஹ்யா அவால் தமிப்பள்ளியும் தகுதி பெற்றன.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் தங்களது முயற்சி அனைத்தையும் ஒன்று திரட்டி சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று பாரதியார் கிண்ணத்தை தட்டிச் சென்றனர். இப்போட்டியில் மவுன்ட் ஹோஸ்டின் தமிழப்பள்ளி குழு மூன்றாவது இடத்தையும் நான்காவது இடத்தை செரம்பாங் (SEREMPANG ) தமிழ்ப் பள்ளி குழுவும் பெற்றது. இதனிடையே துன் அமினான தமிழ்ப்பள்ளி காற்பந்து குழுவின் பயிற்சியாளராக செயல்பட்ட மாசாய் காற்பந்து First touch கிளப்பின் தலைவருமான திருச்சந்தர் ஆறுமுகம் ( Thiruchandar Arumugam ) Amazing Malaysia Book Records சாதனை விருது, MAA மற்றும் OWRC துன் அமினா தமிழ்ப்பள்ளி விருதையும் பெற்றார்.