
ஜோகூர் பாரு, பிப்ரவரி-28 – ஜோகூர் பாருவில் பேராங்காடியில் உள்ள நகைக்கடையொன்றிலிருந்து 59,000 ரிங்கிட் மதிப்பிலான 2 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட ஆடவன், மூன்றே மணி நேரங்களில் போலீஸிடம் பிடிபட்டான்.
பாக்கார் பத்துவில் உள்ள பேரங்காடியில் நேற்றிரவு 7 மணி வாக்கில் அக்கொள்ளை நிகழ்ந்ததாக, நகைக் கடை பணியாளர் மூலமாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், CCTV கேமரா உதவியுடன் நேற்றிரவு 10 மணியளவில் கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள வீட்டில் சந்தேக நபரைக் கைதுச் செய்தது.
அந்த 28 வயது வேலையில்லாத ஆடவனிடமிருந்து, 41.03 கிராம் எடையிலான 916 தங்கச் சங்கிலியும், 73.04 கிராம் எடையிலான 999 தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவன் தப்பியோட பயன்படுத்திய வெள்ளை நிற Honda Accord காரும் பறிமுதல் செய்யப்பட்டதை, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
சந்தேக நபருக்கு பழையக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை; அவன் போதைப் பொருளும் உட்கொண்டிருக்கவில்லை.
விசாரணைக்காக மார்ச் 4 வரை அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.