
ஜோகூர் பாரு, மார்ச்-28- ஜோகூர் பாரு மாநகர மன்றத்திற்குட்பட்ட 27 இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளமானது, கடந்த 30 ஆண்டுகளில் தாங்கள் சந்தித்திராத ஒன்றென, மாநகர மேயர் கூறியுள்ளார்.
2 நாட்களாக 150 மில்லிமீட்டருக்குக் கூடுதலாக பெய்த அடைமழையுடன், ஜோகூர் பாருவில் 3 மீட்டர் உயரத்திற்கு ஏற்பட்ட நீர் பெருக்கும் சேர்ந்துகொண்டதே இந்த அசாதாரண சூழ்நிலைக்குக் காரணம் என Datuk Mohd Haffiz Ahmad கூறினார்.
குறிப்பாக கம்போங் பாசீர் மற்றும் தாமான் தம்போய் இண்டாவில் வெள்ளம் மோசமாகியுள்ளது.
ஸ்கூடாய் ஆற்றின் நீர் மட்டம் 1.5 மீட்டர் அளவில் அபாய கட்டத்தை எட்டியிருப்பதும் அதற்குக் காரணம் என்றார் அவர்.
Kangkar Tebrau, Taman Desa Mutiara, Taman Tampoi Utama, Kampung Seri Serdang, Kampung Melayu Pandan, Kampung Belantik உள்ளிட்டவை மோசமாகப் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களாகும்.
இதையடுத்து உடனடி நடவடிக்கையாக Skuad Kilat, Unit Tindakan Cepat உள்ளிட்ட முன்களப் பிரிவுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் களமிறக்கப்பட்டன.
வெள்ள நீர் மட்டத்தைக் கண்காணிப்பது, பாதிக்கப்பட்ட பாதைகளை சரி செய்வது, சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது, வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவை இறங்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிகளை வழங்கும் பொருட்டு ஜோகூர் பாரு மாநகர மன்றம் வெள்ள நடவடிக்கை அறையைத் திறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலைமை மேம்பட்டாலும், வரக்கூடிய நிலைத்தன்மையற்ற வானிலையை எதிர்கொள்ள அந்நடவடிக்கை அறை தொடர்ந்து செயல்பட்டு வருமென Hafiz சொன்னார்