
ஜோகூர் மஇகாவுடன் இணைந்து மாநில ம.இ.கா தலைவர் ரவீன்குமார் கிருஷ்ணசாமி தலைமையில் சுல்தானா ரோஹாயா அறவாரியம் கடந்த இரு ஆண்டுகளில் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஜோகூரைச் சேர்ந்த 205 இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கியது.
ஜோகூர் பாரு புக்கிட் இண்டா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழா அர்த்தமுள்ள மற்றும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக அமைந்திருந்ததாக சுல்தானா ரோஹாயா அறவாரியத் தலைவர் டத்தோ சுகுமாறன் ராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 205 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் 2 லட்சத்து 5,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினருமான கே.ரவீன்குமார் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்த பெற்றோர்களுக்கும் வாழ்த்தையும் பாராட்டையும் ரவீன்குமார் தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக கல்வித் துறையில் உதவுவது என்ற சுல்தானா ரோஹாயா அறவாரியத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இதுபோன்ற திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடரும் என அதன் தலைவர் டத்தோ சுகுமாறன் ராமன் குறிப்பிட்டார்.
சமூகநலன்,பொருளாதாரம் மற்றும் கல்வி என மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுல்தானா ரோஹாயா அறவாரியம் உதவிகள் வழங்கி வந்த போதிலும் கல்விக்கு அறவாரியம் அதிக முக்கியத்துவம் எடுத்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவில் மஇகா தேசிய மகளிர் தலைவி சரஸ்வதி நல்லதம்பி, ஜோகூர் மாநில கல்வி இலாகாவின் தொடக்கப்பள்ளி மற்றும் பாலர் பள்ளிகளுக்கான உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் ,மாநில கல்வி இலாகாவின் இடைநிலைப் பள்ளிகளின் தமிழ் மொழிக்கான உதவி இயக்குனர் பிரகாஷ் சுந்தரம், மஇகா தேசிய புத்ரி தலைவி தீபா சோலைமலை, ஜோகூர் மஇகா மற்றும் சுல்தானா ரோஹாயா அறவாரிய பிரமுகர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.