பொந்தியான், ஜனவரி-12, இணையம் வாயிலான பகுதி நேர வேலைக்கு அதிக கமிஷன் தருவதாக கும்பலொன்று கூறிய ஆசை வார்த்தையை நம்பி, 721,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் ஜோகூர் பொந்தியானைச் சேர்ந்த ஓர் ஆடவர்.
டிசம்பர் வாக்கில் டிக் டோக்கில் ‘Dona’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபருடன், 49 வயது அவ்வாடவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
கொடுக்கப்படும் வேலைகளை முடித்துக் கொடுத்தால் 25 விழுக்காடு வரை கமிஷன் பார்க்கலாமென அந்நபர் ஆசைக் காட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் கமிஷன் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அதை மீட்க வேண்டுமென்றால் மொத்த கமிஷனில் 6 விழுக்காட்டைச் செலுத்த வேண்டுமென்றும் அவரிடம் கூறப்பட்டது.
கொஞ்சமும் யோசிக்காமல், டிசம்பர் கடைசி தொடங்கி இம்மாதம் வரை 101 தடவையாக பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தமாக 721,226 ரிங்கிட்டை அவர் மாற்றிள்ளார்.
ஆனால் சொல்லியபடி கமிஷன் கிடைக்கவில்லை; இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.