கடன் வழங்கும் நிறுவனமென நம்பி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிய ஆடவர்

இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-2 – டிக் டோக் விளம்பரத்தைப் பார்த்து சிங்கப்பூரில் கடன் வழங்கும் நிறுவனத்திடம் கடன் வாங்குவதாக நினைத்த உள்ளூர் ஆடவர், கடைசியில் மோசடிக்காரர்களிடம் சிக்கி படாத பாடு படுகிறார்.
சிங்கப்பூரில் பதிவுப் பெற்ற கடன் வழங்கும் நிறுவனத்தின் இணைப்பு link-கைத் தட்டி, நவம்பர் 18-ல் 8,000 சிங்கப்பூர் டாலரை, 29 வயது அவ்வாடவர் கடனாக வாங்கியுள்ளார்.
தொடக்கமாக, 800 சிங்கப்பூர் டாலர் அதாவது 2,620 மலேசிய ரிங்கிட் அவரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது.
அதனை வட்டியுடன் சேர்த்து 3,930 ரிங்கிட்டாகத் திருப்பிச் செலுத்த வேண்டுமென, சிங்கப்பூரில் விற்பனை அதிகாரியாக வேலை செய்யும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இப்படியே அடுத்தடுத்துப் பணம் போடப்படுவதும், வட்டிப் பணம் கட்டுவதுமாக போய்க் கொண்டிருந்தது.
கடைசியாக 16,408 ரிங்கிட்டை OTP கட்டணமாக செலுத்த வேண்டுமெனக் கூறிய போதே, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து சிங்கப்பூரில் அவர் போலீஸ் புகார் செதுள்ளார்.
அதை எப்படியோ தெரிந்து கொண்ட மோசடிக்காரர்கள், இஸ்கண்டார் புத்ரி, தாமான் நூசா பாயுவில் உள்ள வீட்டை தீ வைத்து கொளுத்தப் போவதாக மிரட்டினர்.
ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கே வந்து நோட்டீஸ் ஒட்டி விட்டு, கார் மீதும் வீட்டின் மீதும் சிவப்புச் சாயம் தெளித்து விட்டுச் சென்றுள்ளனர்.
சந்தேகத்தில், தான் கடன் வாங்கிய நிறுவனத்தைத் தொடர்புக் கொண்டு கேட்ட போது தான் அவ்வாடவர் அதிர்ச்சியானார்.
அதாவது, அவர் கடன் வாங்கியது அந்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் அல்ல; மாறாக அந்நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களிடமிருந்து என்று.