
கோலாலம்பூர், அக்டோபர்-27,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ‘The Beast வாகனத்தில் மலேசியாவின் MEX நெடுஞ்சாலை வழியாகச் செல்வதை காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, நாட்டின் சாலை வசதிக் கட்டமைப்பு குறித்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
ட்ரம்பின் சிறப்பு உதவியாளரும் தகவல் தொடர்பு ஆலோசகருமான மார்கோ மார்ட்டின் (Margo Martin) அந்தக் 12 வினாடி வீடியோவை X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளார்.
அதில் மலேசிய நெடுஞ்சாலையின் தரத்துக்காக உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
வீடியோவில், KLIA-வில் தொடங்கும் ட்ரம்ப்பின் வாகன ஊர்வலம், சிறந்த சாலைகள் மற்றும் சீரான போக்குவரத்துடன் நகர்கிறது.
பலரும், “இது உலகத் தரமான நெடுஞ்சாலை” என்று புகழ்ந்து, மலேசியாவின் சாலை வசதிகள் குறித்த எதிர்மறை கண்ணோட்டத்தை உடைத்தனர்.
குறிப்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் “நம்மூர் கலிஃபோர்னியாவை விட மலேசியச் சாலைகள் சுத்தமாக இருக்கின்றனவே” என புகழ்ந்தார்.
அதனை ஆமோதித்த இன்னொரு வலைத்தளவாசி, மலேசிய சாலைகள் சுமூகமாக உள்ளதாக பாராட்டினார்.
மற்றொருவரோ “பணத்தை தேசியக் கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட்டால் இதெல்லாம் சாத்தியமே, நம்மை போல் வெளிநாடுகளுக்கு தாரை வார்த்தால் கஷ்டம் தான்” என அமெரிக்க அரசை கிண்டலிக்கும் வகையில் பேசினார்.
47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்டு மலேசியா வந்த ட்ரம்ப், இன்று காலை ஜப்பான் புறப்பட்டார்.
இஸ்ரேலுடன் கொண்ட நட்புறவால் ட்ரம்ப்பின் வருகையை சிலர் சர்ச்சையாக்கினாலும், பொதுவில் நேர்மறையான கருத்துகளையே அவரின் பயணம் விட்டுச் சென்றுள்ளது.



