தங்காக், டிசம்பர்-26 – ஜோகூர், தங்காக்கில் கார்னிவல் விழாவில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி ராட்சத ராக்கெட்டில் சீன நாட்டுக் கொடி இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
பல்லின மக்களை அது சினமூட்டலாமென காம்பீர் சட்டமன்ற உறுப்பினர் ஷாரிஹான் ஜானி (Sahrihan Jani) தெரிவித்தார்.
லேடாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பிரிவு அது குறித்து புதன்கிழமை போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
அவ்விஷயம் வைரலானது முதலே, அது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்துமெனக் கூறி MDT எனப்படும் தங்காக் மாவட்ட மன்றத்தையும் அவர் தொடர்புகொண்டுள்ளார்.
ஒருவேளை MDT நிர்ணயித்த விதிமுறையை விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்றவில்லை என்பது உறுதியானால், அவ்விழாவுக்கான பெர்மிட்டை இரத்துச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்விவகாரத்தில் மன்னிப்பு மட்டும் போதாது, நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டுமென அவர் சொன்னார்.
முன்னதாக, அந்த மாதிரி ராட்சத ராக்கெட்டின் இறக்கைப் பகுதியில் சீன நாட்டுக் கொடி இருக்கும் படங்கள் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், அவ்விவகாரம் விசாரணையிலிருப்பதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் ரொஸ்லான் மொஹமட் தாலிப் (Superintenden Roslan Mohd Talib) தெரிவித்தார்.