
கோலாலம்பூர், மார்ச்-25 – தங்க விலை எதிர்பார்ப்பையும் மீறி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உலகலாயப் பொருளாதாரம் நிலைத்தன்மையற்றிருப்பதால், முதலீட்டாளர்கள் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துகொள்ள முனைகின்றனர்; இதனால் தங்க விலை அடிக்கடி புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தங்க விலை கிராமுக்கு 396 ரிங்கிட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
தற்போது தங்க விலை கிராமுக்கு 470 ரிங்கிட்டாக மற்றொரு புதிய உச்சத்தைத் தொட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏறுமுகத்தை வைத்துப் பார்க்கும் போது தங்க விலை இன்னும் எந்த உயரத்தை எட்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிலைத்தன்மையற்ற சூழலே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் பேங்க் முவாலாமாட் மலேசியாவின் பொருளாதார வல்லுநர் Dr மொஹமட் அஃப்சாநிசாம் அப்துல் ரஷிட்.
உலகப் பொருளாதார நெருக்கடியின் போது தங்கத்தின் தேவை அதிகமாக உள்ளது.
அதன் மதிப்பு அதிகரிப்பது மட்டுமன்றி பணவீக்கம், நாணய மதிப்பு சரிவு மற்றும் புவிசார் அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும் மாறுகிறது.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தீவிரமாக தங்கத்தை சேமித்து வருகின்றன; 2010-ல் 1.8 விழுக்காடாக இருந்த மொத்த தேவையின் பங்கை 2024-ல் 21.0 விழுக்காடாக அவை அதிகரித்தன.
இவ்வாண்டு இறுதிக்குள் 1 கிராம் தங்கம் 710 ரிங்கிட் வரையில் விலை உயருமென நாணய ஊக வணிகர்கள் கணித்துள்ளனர்.
என்றாலும், Dr அஃப்சாநிசாம் எச்சரிக்கையாகவே உள்ளார்.
700 ரிங்கிட்டைத் தொடுவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை பிடிக்கலாம் என அவர் சொன்னார்.
மிகவும் யதார்த்தமான இலக்கு என்று பார்த்தால், அடுத்து வரும் சில ஆண்டுகளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 முதல் 3,500 டாலர் வரையில் தான் இருக்கும்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அடிக்கடி புதிய உச்சத்தைத் தொடுவதால், தங்க விலையை அனுமானிப்பது மிகவும் கடினமே என்றார் அவர்.