
ஜோகூர் பாரு, நவம்பர் 8 – இஸ்கண்டார் புத்ரி தஞ்சூங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் (PTP), KYPARISSIA என்ற ‘container’ கப்பல் நேற்று மதியம் தீ விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முன்னதாக எவ்விதமான நச்சு வாயு கசிவும் ஏற்படவில்லை என்று மலேசிய கடல்துறை (Jabatan Laut Malaysia – JLM) தெரிவித்துள்ளது.
‘Container’ இல் ஏற்பட்ட கோளாறு காரணமாகதான் இத்தீவிபத்து ஏற்பட்டதென்று ஆரம்ப விசாரணையில் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
‘Togo’ நாட்டின் துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த அக்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும் மூவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீ விபத்தால் எந்தவித நச்சு அல்லது அபாயகரமான வாயுவும் வெளியேறவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அறியப்படுகின்றது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக துறைமுக நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.



