
ஹவானா, நவம்பர் -11 – கிழக்கு கியூபாவின் கடற்கரையில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.8-டாக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட மோசமான மின் தடை மற்றும் இரண்டு சூறாவளிகளின் தாக்கத்திலிருந்து அத்தீவு இப்போது தான் மீண்டு வரும் நிலையில், இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
வலுவான நிலநடுக்கம் என்பதால், பரவலாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின, மின் கம்பிகளுக்கும் சேதாரம் ஏற்பட்டுள்ளது.
உயிர் சேதம் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
அவசர மீட்புப் பணிகளைத் தொடங்க ஏதுவாக நிலவரங்களை அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக கியூபா அதிபர் கூறினார்.
ஏராளமான கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதையும், தரையில் குப்பைகள் குவிந்துகிடப்பதையும் அரசாங்கத் தொலைக்காட்சி வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் காட்டுகின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது கேட்ட பயங்கர வெடி சத்தம் தங்கள் வாழ்நாளில் இதுவரை கேட்டிராத ஒன்று என பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள் கூறினர்.
சுனாமி அபாயத்தை ஏற்படுத்தவில்லையென்றாலும், பக்கத்து கரீபியன் நாடுகளான பஹாமாஸ், ஜமைக்கா, ஹைத்தி உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.