Latestமலேசியா

தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பீர்

கோலாலம்பூர், மார்ச் 6 – நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் பயிற்சி பெற்ற அதிகமான ஆசியர்களை நியமிக்க வேண்டும் என மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயங்கங்களின் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் அரசாங்கம் கல்வி அமைச்சிற்கு கூடுதலான நிதி ஒதுக்கி வருகிறது.

ஆனால் கல்வி அமைச்சு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதி ஆண்டுதோறும் சுருங்கி வருவது ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா அமைப்பின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ம.வெற்றிவேலன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சிற்கு அரசாங்கம் ஒதுக்கும் வரவு செலவு திட்ட தொகையில் 0.2 விழுக்காடு தொகையை தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் அவற்றின் மானியத்திற்காக ஒதுக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கை வெற்றிவேலன் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழ்ப்பள்ளிகளில் தேசிய மொழியை போதிக்கக்கூடிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் மும்மொழி அகராதிகளை கல்வி அமைச்சு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதோடு தேசிய மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களை தமிழ்ப்பள்ளிகளில் தேசிய மொழி போதனை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அறைகூவல் விடுத்தார்.

தகவல் தொழிற்நுட்ப வசதிள் , நிலப் பற்றாக்குறை மற்றும் கட்டிட புதுப்பிக்கும் நடவடிக்கைக்காக ஆண்டுதோறும் 60 மில்லியன் ரிங்கிட்டை தமிழ்ப் பள்ளிகளுக்காக அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்றும் வெற்றிவேலன் வலியுறுத்தினார்.

இதனிடையே மாணவர்கள் குறைந்த இடங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை அதிகமாக இந்தியர்கள் வாழும் குடியிருப்பு இடங்களில் மாற்றுவதற்கான விவேகமான நடடிக்கையில் அரசாங்கம் ஈடுபட வேண்டுமென மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்கள் பேரவையின் தேசிய துணைத்தலைவர் குமரன் மாரிமுத்து கேட்டுக்கொண்டார்.

தொடக்க தேசிய மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் 10 மாணவர்கள் இருந்தாலும் தாய்மொழி வகுப்புகள் போதிக்கப்பட வேண்டும் என இதற்கு முன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.

ஆனால் இது தொடர்பான சுற்றறிக்கை எதுவும் கல்வி அமைச்சு இன்னும் வெளியிடவில்லை என்ற ஏமாற்றத்தை சிலாங்கூர் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி வெளிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!