Latestமலேசியா

தமிழ்ப்பள்ளிகளுக்கு RM19 மில்லியன் நிதி ஒதுக்கீடு போதுமா? – ராமசாமி சாடல்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-24 – தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்புக்கு வெறும் 1 கோடியே 90 லட்சம் (RM19 million) ரிங்கிட் நிதி ஒதுக்கீடு போதுமா என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்தாண்டை விட ஒரு மில்லியனுக்கும் குறைவான இந்த உயர்வு, பணவீக்கம் மற்றும் பிற அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, வெறும் சொற்பமே.

ஆனால் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ, இந்த ஒதுக்கீடு என்பது நாட்டின் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதில் அரசின் அர்ப்பணிப்பைப் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

மடானி அரசில் தான் மட்டும் அமைச்சர் அல்லது துணை அமைச்சராக இருந்திருந்தால், இதை அறிவிப்பதில் தான் உண்மையிலேயே வெட்கப்பட்டிருப்பேன் என ராமசாமி காட்டமாகக் கூறினார்.

நாட்டில் 500-க்கும் அதிகமான தமிழ்ப் பள்ளிகள் உள்ளன; அவற்றில் பல பள்ளிகள், ஆண்டுக் கணக்கில் புறக்கணிக்கப்பட்டதால் பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ளன.

தேசிய மற்றும் சீனப் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், உள் பகுதிகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாக மிக மோசமான நிலையில் இருக்கின்றன.

புறநகர் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

பினாங்கில் தான் துணை முதலமைச்சராக இருந்தபோது, நிபோங் திபால் தமிழ்ப் பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திய பிறகு, மாணவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததை ராமசாமி சுட்டிக் காட்டினார்.

மற்ற அமைச்சுகளோடு ஒப்பிடுகையில் கல்வி அமைச்சுக்கு ஆக அதிகமாக ஆண்டுதோறும் 60 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட் கிடைக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு என்பது பெருங்கடலில் ஒரு துளி நீர்தான்.

சில தமிழ்ப் பள்ளிகள் விரைவில் மேம்படுத்தப்படாவிட்டால், அவை மூடப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

இது நடந்தால், அதற்கு அரசாங்கமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ராமசாமி எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!