
கோலாலம்பூர், நவ 7 – தமிழ்ப்பள்ளிகளையும் அதில் பயிலும் மாணவர்கள் , கல்வி அமைச்சு மற்றும் ஆசிரியர்களையும் சிறுமைப்படுத்தி காணொளி வெளியிட்ட எழில்வேந்தன் சுந்தரேசன் என்பவருக்கு எதிராக ஐந்து அரசு சாரா இயங்கங்கள் போலீசில் புகார் செய்துள்ளன. பள்ளிகளில் பல ஆண்டு காலமாக கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜைக்கு எதிராகவும் எழில்வேந்தன் வெளியிட்டுள்ள காணொளி இந்து சமயத்தை ஏளனப்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசிய தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நலனபிவிருத்தி சங்கம், மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், உலக மனித உரிமை அமைப்பு , மலேசிய தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், மலேசிய இந்தியர் மக்கள் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையில் செந்துல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை தமிப்பள்ளி மேம்பாட்டு நலனபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ம. வெற்றி வேலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சரஸ்வதி பூஜை என்ற பெயரில் தமிழ்ப்பள்ளிகளில் பூஜை நடத்துவது, யாகம் வளர்ப்பது போன்றவை இந்து சனாதான கோட்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தான் வெளியிட்ட காணொணியில் எழில்வேந்தன் கூறியிருப்பது வரம்பை மீறியிருக்கிறது. ஆசிரியர் சமூகம் மற்றும் கல்வி அமைச்சிற்கு எதிராக மிகவும் மோசமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கும் எழில்வேந்தனுக்கு எதிராக போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களது புகாரில் கேட்டுக்கொண்டிருப்பதாக அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வெற்றிவேலன் தெரிவித்தார்.