
கேமரன் மலை, மார்ச்-23 – பஹாங், கேமரன் மலையைச் சேர்ந்த 8 தமிழ்ப் பள்ளிகள், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ‘அறம்-AI’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் AI பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
குவாலா தெர்லா தமிழ்ப் பள்ளி, தானா ராத்தா தமிழ்ப்பள்ளி, போ சத்து தோட்டத் தமிழ்ப் பள்ளி, போ டுவா தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை பாலாஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி, புளு வேலி தோட்டத் தமிழ்ப் பள்ளி, ஷும் யிப் லியோங் தமிழ்ப் பள்ளி ஆகியவே அந்த 8 தமிழ்ப் பள்ளிகளாகும்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களோடு மாணவர்களுக்கு அந்த அதிநவீன தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுப்பதே அந்த முன்னோடித் திட்டத்தின் நோக்கமென, துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
AI என்பது கற்பதற்குக் கடினமான ஒன்று என மாணவர்கள் நினைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஆரம்பத்திலிலேயே இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தியச் சமூகம் பின்தங்கி விடக் கூடாது என்ற நோக்கில், இந்த உயர் தாக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
AI ஓர் அச்சுறுத்தல் அல்ல; மாறாக, கல்வி, வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் நன்மையைக் கொண்டு வரக் கூடிய ஓர் ‘ஆயுதம்’ என்றார் அவர்.
கேமரன் மலை, குவாலா தெர்லா தமிழ்ப் பள்ளியில் ‘மலேசியாவின் எதிர்காலத்திற்கான AI’ என்ற பயிற்சியைத் தொடக்கி வைத்து பேசுகையில் சரஸ்வதி அவ்வாறு சொன்னார்.
ஆசியான் வட்டாரத்தில் AI மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தில் மலேசியா முன்னோடியாக விளங்க வேண்டுமென்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விருப்பத்திற்கு ஏற்ப,
‘மலேசியாவின் எதிர்காலத்திற்கான AI’ என்ற இப்பயிற்சித் திட்டத்தை மைக்ரோசோஃவ்ட் தொடங்கியுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் 800,000 மலேசியர்கள் AI திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என அத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.