
கோலாலம்பூர், ஜன 27 – புக்கிட் ஜாலில் (Bukit Jalil) தேசிய ஹாக்கி (Hoki) அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான தேசிய ஹாக்கிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிலங்கூர் குழுவும் , மகளிர் பிரிவில் நெகிரி செம்பிலான் அணியும் வெற்றியாளர் பட்டத்தை வென்றன. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற சிலாங்கூர் குழுவுக்கு இரண்டாயிரம் ரிங்கிட் ரொக்கத்தோடு சுழற்கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பெற்ற பினாங்கு குழுவுக்கு ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் கேடயமும் வழங்கப்பட்டன. மூன்றாவது இடத்தைப் பெற்ற நெகிரி செம்பிலான் குழுவுக்கும் ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தோடு கேடயமும் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக பினாங்கு மாநிலத்தின் தானியமித்திரன் வெங்கடேஸ் (Thaniyamitran Vengkades) தேர்வு பெற்ற வேளையில் சிறந்த கோல்காவலராக நெகிரி செம்பிலான் குழுவின் வைத்திஸ்வரன் இளங்கோ (Vaitheswaran Elago) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகளிர் பிரிவில் கூடுதல் கோல் அடித்த ஆட்டக்காரராக நெகிரி செம்பிலான் அணியின் சரண்யாசாமிநாதன் (Saranya Saamynathan) , மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக டனிஷா மோகன் குமார் (Danisha Mogan Kumar) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த கோல்காவலராக ஜொகூர் குழுவின் சிவானி பிரபாகரன் (Shivani Prabakaran) தேர்வு பெற்றார். இம்பாக் ஹாக்கி கழகத்தின் ஏற்பாட்டில் மலேசிய ஹாக்கி சம்மேளனமும் கியு நெட் நிறுவனமும் இப்போட்டியை ஏற்பாடு செய்தன. நிறைவு விழாவில் இம்பாக் ஹாக்கி கழகத்தின் தலைவரும் இப்போட்டியின் ஏற்பாட்டுக்குழு தலைவருமான டோமினிக் சவரிமுத்து (Domanic Sawarimuthu) ஆற்றிய உரையில் இப்போட்டி தொடர்ந்து நடைபெறவும் ஹாக்கி விளையாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிய அனைவரும் உதவ வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். இப்போட்டியின் நிறைவு விழாவில்
மலேசிய ஹாக்கி சம்மேளன தலைவர், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.