
கோலாலம்பூர், பிப் 19 – நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தி வருவதோடு இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என ம.இ.கா வின் உதவித் தலைவரும் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ T. முருகையா தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், தமிழ் கல்வி முறை பலவீனமாகும் மற்றும் மலேசியாவில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டிருகின்றார்.
இன்று பல தமிழ்ப்பள்ளிகள் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகிளில் சிறந்து விளங்குகின்றன. தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் ,தலைமை ஆசிரியர்களும் சமூக உணர்வோடு நமது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் துறையில் சிறந்து விளங்குவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வேளையில் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்களை ஊக்குவிப்பதற்கு சமூகத் தலைவர்கள் , அரசியல் கட்சிகள் உட்பட தன்னார்வ அமைப்புகளும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்றும் டத்தோ முருகையா வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.