
தம்பின், பிப்ரவரி 3 – நேற்றிரவு தம்பின் Jalan Bunga Tanjung-யில், இரு சகோதரர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள், கட்டுமானத்தில் இருந்த கழிவுநீர் குழியில் மோதியதில், 14 வயது பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர், தனது 17 வயது அண்ணனுடன், Kuala Ina-வில் உள்ள நண்பர் வீட்டுக்குச் செல்ல மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
வளைவுப் பகுதியில் பயணிக்கும்பொழுது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடப்புறத்தில் இருந்த சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள கழிவுநீர் குழியில் மோதி விபத்துக்குள்ளானது என்று தம்பின் மாவட்ட காவல் துறை தலைவர், Superintendan Amiruddien Sariman தெரிவித்திருந்தார்.
இந்த மோதலால், பின்னால் அமர்ந்திருந்த மாணவர் அந்த குழிக்குள் விழுந்தார் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, தம்பின் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிய அவரது அண்ணன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் போலீசார் இந்த விபத்தை சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து மேல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



