
சியோல், மார்ச்-22 – குடியிருப்புப் பகுதியில் தவறுதலாக வெடிகுண்டுகளை விழச் செய்ததற்காக, தென் கொரிய ஆகாயப் படையின் 2 விமானிகள் ஓராண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதத் தொடக்கத்தில், தலைநகர் சியோலுக்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மார்ச் 6-ஆம் தேதி, அசல் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி சுடும் ஆயுதப் பயிற்சிகளில் 2 போர் விமானங்கள் ஈடுபட்டன.
அப்போது MK-82 இரகத்தைச் சேர்ந்த 8 வெடிகுண்டுகள், பயிற்சிக் களத்திற்கு வெளியே விழுந்தன.
அதில் 38 பொது மக்கள் உட்பட 52 பேர் காயமடைந்ததால் விவகாரம் பெரிதானது.
இதையடுத்து தவறான இலக்கைப் பதிவுச் செய்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி அவ்விரு விமானிகள் மீதும் விசாரணைத் தொடங்கி, அவர்களின் தகுதியும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நீடிப்பதால் தற்போதைக்கு பணியிடை நீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவைப் பொருத்து நிரந்தர பணிநீக்கம் அமையுமெனக் கூறப்படுகிறது.
இரு விமானிகளுக்கும் தெளிவான உத்தரவை வவழங்கவில்லை எனக் கூறி 2 உயரதிகாரிகள் பணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.