
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-6 – சுகாதாரச் சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வாக, இந்தோனேசியாவிலிருந்து தாதியர்களை வேலைக்கமர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள இந்தோனேசியத் துணைத் தூதரகப் பேராளர் Sigit S. Widiyanto அந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
தற்போது மலேசியாவில் உள்ள அனைத்துலக நோயாளிகளில் 70 விழுக்காட்டினர் இந்தோனேசியர்கள் என்பதால், இரு நாட்டு மருத்துவமனைகளுக்கும் இடையிலான ஒரு வியூக ஒத்துழைப்பாக இது அமையும் என்றார் அவர்.
மலேசியாவுக்கோ தாதியர் பற்றாக்குறைப் பிரச்னை; இந்தோனேசியாவிலோ அவர்களின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாகவே மிதமிஞ்சியுள்ளது என்றார் அவர்.
மொழி, கலாச்சாரம், தொடர்பு முறை என ஏறக்குறைய அனைத்து அம்சங்களிலும் இரு நாட்டினரும் ஒத்துப் போவதால், இதில் பிரச்னை ஏதும் இருக்காது என்றே தோன்றுவதாக Widiyanto நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவில் உள்ள முதன்மை அரசாங்க மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, மாநில மந்திரி பெசார் அண்மையில் கூறியிருந்தார்.
ஒரு shift வேலை நேரத்தில் ஒரு தாதி அதிகபட்சமாக 8 நோயாளிகளை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்ற நிலையில், நடப்பில் ஒரு தாதிக்கு 10-த்திலிருந்து 14 நோயாளிகள் என்ற விகிதத்தில் ஆள் பற்றாக்குறை மோசமாகியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.