பெய்ஜிங், செப்டம்பர்-9, சீனாவில், தவறான விலைப் பட்டியலை வைத்ததால் வெறும் இருபதே நிமிடங்களில் கோடிக்கணக்கான நட்டத்தைச் சந்திக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டது, சிறு தொழில் நிறுவனமொன்று.
தென் கிழக்கு சீனாவில் பிரபலமான Little Swan சலவை இயந்திரங்களை விற்று வரும் நிறுவனம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி திடீரென மிகக் குறைந்த விலைச் சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
வழக்கத்தை விட மிக மிக மலிவான விலையில் சலவை இயந்திரம் கிடைப்பதால் வாடிக்கையாளர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்பதிவுச் செய்தனர்.
வெறும் இருபதே நிமிடங்களில் 40,000 முன்பதிவுகள் செய்யப்பட்டன.
ஆனால், கடைப் பணியாளர் தவறுதலாக குறைவான விலைப் பட்டியலை வைத்து விட்டது பின்னர் தான் தெரிய வந்தது.
அதாவது, ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள சலவை இயந்திரத்தை வெறும் 183 ரிங்கிட் என்றும், 1,529 ரிங்கிட் மதிப்பிலானதை 269 ரிங்கிட் என்றும் அவர் தவறாக லேபல் செய்துள்ளார்.
இதனால் வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு ஆளாளுக்கு இரண்டு மூன்று சலவை இயந்திரங்களுக்கு முன்பதிவுச் செய்தனர்.
மொத்த முன்பதிவுகளையும் ஏற்றுக் கொண்டிருந்தால், அந்நிறுவனத்திற்கு 1 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நட்டமேற்பட்டிருக்கும்.
நடந்த தவற்றுக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, அனைத்து முன்பதிவுகளையும் ரத்துச் செய்யு விடுமாறும் அது மன்றாடியது.
வாடிக்கையாளர்களும் முன்பதிவுகளை ரத்துச் செய்ததால், கோடிக்கணக்கில் நட்டமடைவதிலிருந்து கடைசி நேரத்தில் அந்நிறுவனம் தப்பித்தது.